ஆன்மா மாறுதலுக்கு உட்பட்டதா?

 ஒரு உயிரின் அழியாத மற்றும் நிரந்தரமானது எது வென்றால் அது ஆன்மா.

ஆன்மாவிற்கு என்று ஒரு ஆசையும், எண்ணங்களும், சிந்தனையும் செயல்களும் கிடையாது.

எப்பொழுதும் ஆன்மா என்பது ஒரு நாடகத்தை பார்க்கும் பார்வையாளராக மட்டுமே செயல்படுகிறது.

அந்த நாடகத்தில் என்றும் அது நடிப்பதில்லை.

ஒரு வங்கியில் நாம் முதலீடு செய்கிறோம், பணத்தை சேமித்து வைக்கிறோம், கடன் வாங்குகிறோம் நம்முள் மட்டும்தான் இதெல்லாம் நடக்கிறது ஆனால் வங்கி எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

அதுபோல நமது மனமும் உடலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது.

அப்படி என்றால் இந்த ஆன்மாவினால் நமக்கு என்ன பிரயோஜனம்?

இந்த வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்து மடிய வேண்டியதுதானா?

உதாரணமாக அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோம். அவர் தென் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் மின் விளக்கு கூட இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்தார். அவர் அதே கிராமத்தில் ஏழையாகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை கழித்து இருக்கலாம். அவருடைய இப்பிறவியின் கர்மாவினால் அவருடைய பிறப்பு ஒரு ஏழையாக இருந்திருக்கலாம்.

ஆனால் அவர் தன்னை உணர்ந்ததால், இறைவனை உணர்ந்ததால், தன் ஆன்மாவை உணர்ந்ததால் அத்தனை தடைகளையும் ஏணி படிகளாக மாற்றி இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞானி, ஜனாதிபதி என்ற உயர்ந்த நிலையை அடைந்தார்.

இன்றும் குழந்தைகளின் இதயத்தில் நிரந்தரமாகவும் இருக்கின்றார்.

பிறப்பு இப்படியும் இருக்கலாம், நமது கர்மா இப்படியும் இருக்கலாம், நமது கர்ம வினையை நாம் அனுபவிக்கலாம் ஆனால் சிறிது சிறிதாக தன்னை உணர்ந்து தனது ஆன்மாவை உணர்ந்து நமது வாழ்க்கையின் பாதையை நல்வழியிலும் மற்றும் ஆன்மீகத்தை நோக்கி திருப்பும்போது நமது ஆன்மா மாற்றத்திற்கு உள்ளாகும்.

ஏனென்றால் வாழ்க்கையில் இவ்வளவு காலமாக நீங்கள் இந்த பௌதிக வாழ்வில் கிடைக்கும் இன்பங்களை ஆன்மாவாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த வாழ்க்கை மற்றும் இந்த உடல் எல்லாம் நிலையற்றது.

இன்று முதல் உங்களது ஆன்மாவை புனிதப் படுத்துவதற்காக செயல் புரியுங்கள்.

நான் யார் என்பதையும் இந்த வாழ்க்கை எதற்காக உருவாக்கப்பட்டது என்பதையும் எனது வாழ்க்கையின் லட்சியம் எது என்பதையும் நமது ஆன்மாவிற்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தால் ஆன்மாவுக்கு மாற்றம் ஏற்படும்.

இந்த மாற்றம் ஆன்மீகம் என்ற ஒரு திறவுகோலை கொண்டு இறைவனின் கதவுகளை திறக்கும் போது மட்டுமே நடைபெறுகிறது.

இந்த மாற்றம் ஒருமுறை உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் நீங்கள் புனித ஆத்மாவாக மாறிவிடுவீர்கள். இந்தப் பிறவியில் மட்டுமல்ல நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் இந்த மாற்றத்திற்கான நற்பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

கீழே கூறியுள்ள உறுதிமொழியை தினமும் காலையிலும் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பும் உங்களுக்குள் சொல்லுங்கள்.


எனது உடல், மனம், எண்ணங்கள், சிந்தனை அனைத்தையும் ஆன்மாவை புனிதப் படுத்துவதற்காகவே மட்டுமே பயன்படுத்துகிறேன்.

இறைவா என்னுள் தோன்றும் தீய எண்ணங்களை எல்லாவற்றையும் அழித்து எனது ஆன்மாவை புனிதப்படுத்து.

ஒவ்வொரு நாளும் எனது ஆன்மா புனிதம் அடைவதை நான் நம்புகிறேன்,உணர்கிறேன் மற்றும் அனுபவிக்கிறேன்.


ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!

ஓம் நமசிவாய!

நீங்கள் அனைவரும் மிகச்சிறந்த ஆன்மாவாக மாற இந்த அடியேனின் வாழ்த்துக்கள். 


- Yogi Shiva Nesananda














No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

Love yourself