உண்மையான குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

ஓம் நமசிவாய!

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!


இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் உங்களுக்கான விடையை

நான் அளித்து விடுகிறேன்.

எக்காலத்திலும் ஒரு சிஷ்யர் தனது குருவை தேர்ந்தெடுக்க முடியாது. குருதான் தனது சிஷ்யரரை தேர்ந்தெடுக்கிறார்.

ஆன்மீக பயணத்தில் குருவின் தேவை அவசியம் ஆகிறது, ஏனென்றால் ,ஒரு தாய் எவ்வாறு தன குழந்தையின் பசிக்குயேற்றவாறு செயல்படுகிறாளோ , அதுபோன்று ஒரு உண்மை குரு தன் சீடர்களின் ஆன்மீக பசிக்குயேற்றவாறு உபதேசித்து நல் வழி காட்டுகிறார் அதுமட்டுமின்றி , ஒரு தாய் போன்று தன் சீடர்களுக்கு ஆன்மீக பசியை ஞானத்தை வழங்குவதன் மூலம் தீர்த்துவைப்பார் .


நான் யார் ? எதற்காக  இங்கு வந்திருக்கிறேன் ? எனது பிறவியின் நோக்கம் என்ன ? ஏன் இந்த பிரபஞ்சம்  உலகம் உயிர்கள்  தோன்றின ? நம்மை ஏன் இறைவன் படைத்தார் ? எது உயிர் ? எது ஆன்மா? மோட்சம் அடைவது எப்படி?  இப்படி எல்லாம் துல்லியமாக ஆராய்ச்சி செய்வோருக்குத்தான் குரு அவசியம். 

எனது ஆன்மீகத் தேடுதலில் இருந்து கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் சிஷ்யர் மற்றும் குரு இருவருக்கும் நடுவில் உள்ள பிரச்சனைகளை பார்க்கலாம்.

முதலாவது பாதுகாப்பு:

தற்பொழுது நிறைய போலி சிஷ்யர்களும், போலி குருக்களும்

இருக்கிறார்கள். இவர்களில் நாம் சரியான குருவை

எவ்வாறு தேர்ந்தெடுப்பது. போலியான ஒரு குருவிடம் சேர்ந்துவிட்டால்

நமக்கு என்னென்ன ஆபத்துகள் விளையும் என்ற

எண்ணங்கள் ஆன்மீகத்தின் பின்னடைவை ஏற்படுத்தியது.

இரண்டாவது தட்சனை மற்றும் பணம்:

சிஷ்யன் குருவிற்கு எந்த தட்சணையும் மற்றும் எந்த பணமும் தராமல்

ஆன்மீகத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்.

எல்லாவற்றையும் இழந்து நின்ற குருவிற்கும் வாழ்வாதாரத்திற்காக சிறிதளவு தட்சணையும் பணமும் தேவைப்படுகிறது. இங்கு இலவசமாக எது கிடைக்கிறதோ அதைத்தான் நாம் தேடிச் செல்ல விரும்புகிறோம்.

மூன்றாவது தவறான வழிகாட்டுதல்:

உதாரணமாக சிலர் குரு என்ற போர்வையில் மூச்சுப்பயிற்சி, குண்டலினி

மற்றும் வாசியோகத்தை கற்றுத்தருகிறார்கள். தவறாக கற்கப்படும்

இந்த யோக மார்க்கத்தின் காரணமாக

சில பின் விளைவுகள் ஏற்படலாம்.


நான்காவதாக எல்லாம் தெரிந்த குரு:

சிஷ்யர்கள் தங்களது குருவிற்கு எல்லாம் தெரிய வேண்டும்

என்று நினைக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பாதை பல வகையானது,

அதில் குரு என்பவர் ஒரு பாதையில்தான் பயணிக்கிறார்

அதனால் அவரிடம் நீங்கள் எல்லா கேள்விகளுக்கும் விடை அளிப்பார்

என்று எதிர்பார்க்கக்கூடாது.

ஐந்தாவதாக பணக்கார குரு:

குரு என்பவர் தனக்கென்று ஒரு ஆசிரமம் நூற்றுக்கணக்கான சீடர்களும்

இருப்பதால் எந்த ஒரு சிஷ்யரும் அவரை எளிதாக அணுக முடிவதில்லை.

மற்றொரு மனோபாவம் தாங்கள் மற்றும் பணக்காரராக இருக்க வேண்டும் குரு என்பவர் ஏழையாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு.




எதை நினைக்கிறாயோ அதையே நீ அடைவாய்:

உங்களது தேடல் உண்மையான ஆன்மீகமாக இல்லாமல்

பிரார்த்தனையாக இருந்தால் உங்களுக்கு போலியான ஒரு குரு கிடைக்க

அதிகமாக வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் நீங்கள் மிகப்பெரிய மாளிகை, கோடிக்கணக்கில்

வர்த்தகத்தில் லாபம், இல்லற வாழ்க்கையில் உள்ள உங்களது

பிரச்சினைகளுக்கான தீர்வு, சொகுசான வாழ்க்கை மற்றும் மகிழ்வுந்து எப்படி ஏராளமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு குருவை நீங்கள் தேடினால் உங்களுக்கு ஒரு  போலியான குருதான் கிடைக்க வாய்ப்புள்ளது.

பிரச்சினைகளை நாம் பார்த்துவிட்டோம் அடுத்து அதற்கான தீர்வுகளை காணலாம்.

நீங்கள் காசி ராமேஸ்வரம் அல்லது திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்றால் பல நூறு ரூபாய்கள் உள்ளது பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. அப்படி என்றால் நீங்கள் பக்தி செலுத்த வேண்டும் என்று நினைத்தாலும் கூட பணம் செலவு செய்ய வேண்டும். அதனால் ஒரு குரு வேண்டும் என்றாலும் நீங்கள் பணம் செலவு செய்ய‌ தயாராக வேண்டும்.

முதலில் உங்களது குடும்பத்தில் மற்றும் உங்களது நண்பர்கள் இடத்தில் ஆன்மீக ஆர்வம் உள்ளவர்கள் உடன் இணைந்து சிறிதுசிறிதாக ஆன்மிக விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு ஆன்மீகத்தில் வழி காட்ட வாய்ப்பு உள்ளது. இது ஒரு பாதுகாப்பு வழியும் கூட.

இரண்டாவது உங்களது தகுதிக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ஆன்மீகத்துக்கு ஒரு தொகையை ஒதுக்குங்கள். அதில் ஒரு பகுதியை ஆன்மிக புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகப்படுத்துங்கள். உங்களை நீங்களே சுய ஆய்வு உட் படுத்துங்கள்.

ஆன்மிகத்திற்கு அடிப்படையானது உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம்.

இந்த இரண்டையும் கற்றுத் தரக்கூடிய ஆன்மிகக் குருக்களிடம் எளிமையான ஆன்மீகப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளுங்கள்.

அதற்காக சிறிதளவு பணம் விரையம் ஆனாலும் அதற்காக வருந்தாதீர்கள். அதிலிருந்து நீங்கள் எவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைவீர்கள் என்பதை நீங்கள் உணருங்கள். 

இதற்காக நிறைய ஆன்மிகவாதிகள் கட்டண முறையில் வகுப்புகளை நடத்துகிறார்கள் அதில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஒருவராக செல்லாமல் நான்கைந்து நண்பராக செல்வது நல்லது.

எனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு குறிப்பிடுகிறேன். நான் தீவிரமான ஆன்மீக தேடுதலில் இருந்த பொழுது ஒரு மகானை சந்தித்தேன். அவர் எப்பொழுதும் அமைதியாக இருப்பார், யாரிடமும் பேச மாட்டார்.  அவர் ஒரு மௌன சாமியார். அவரிடம் என்னுடைய ஆன்மிக வேட்கையை வெளிப்படுத்திய போது என்னிடம் இருந்த புத்தகத்தில் ஒன்றை அவர் எடுத்து இரண்டு வரிகளை எனக்கு அவர் கைகளால் சுற்றிக் காட்டினார் ஒன்று பொய் சொல்லாமை, மற்றொன்று புலால் உண்ணாமை.

அந்த நொடியிலிருந்து நான் பொய் சொல்வதையும்

மற்றும்

புலால் உண்பதையும் விட்டுவிட்டேன்.

ஒரு குரு என்பவர் எப்பொழுதும் வேண்டுமானாலும் மற்றும் எந்த ரூபத்திலும் வருவார் அதற்குப் பிறகு என் வாழ்நாளில் இன்றுவரை அவரை சந்தித்தது இல்லை. குரு கிடைக்கும் பொழுது அவரை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு நிமிடமாவது நின்று கடவுளிடம் பிரார்த்தனை வையுங்கள்.

"இறைவா நான் உன்னை அடைவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன் ஆனால் ஆன்மிக கனவு என்பது பூட்டப்பட்டுள்ளது அந்த ஆன்மீக கதவைத் திறப்பதற்கு எனக்கு ஒரு நல்ல குருவை வழி காட்டுவாயாக" என்று மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள்.



உங்களுக்கு ஒரு உண்மையான குரு கிடைக்க இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

- Yogi Shiva Nesananda

No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

hermetic philosophy