ஓம் நமசிவாய!
ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!
பெரும்பாலானோர் செய்யும் பக்தி எப்படி இருக்கும்? தினமும் காலையும், மாலையும் விளக்கு ஏற்றுவது, பூ போடுவது, கற்பூர ஆராதனை காட்டுவது, ஊதுபத்தி கொளுத்தி வைப்பது, முடிந்தால் வாழைப் பழத்தின் முனையை சற்று உரித்து வைப்பது....மற்றபடி நாள் கிழமை என்றால் பொங்கல், சுண்டல், வடை, பொரி என்று நைவேத்தியம் பண்ணுவது. முடிந்தால் சில பல இடங்களுக்குச் சென்று, கட்டணம் செலுத்தி சிறப்பு வழியில் சென்று கடவுளை தரிசிப்பது. இதுதான் பெரும்பாலானோர் செய்யும் பக்தி.
இதில் அவர்களுக்கு பெரிய பெருமை வேறு. ஒரு நாள் கிழமை விடுவது கிடையாது, தினம் இரண்டு வேளை பூஜை செய்கிறேன், மடி, ஆச்சாரம் என்று ஒரே பெருமை.
இதெல்லாம் செய்து விட்டால், சொர்க்கத்தில்/வைகுண்டத்தில்/ கைலாயத்தில் ஒரு இடம் நமக்கு கட்டாயம் உண்டு என்று முன்பதிவு செய்த மாதிரி தைரியமாகத் திரிகிறார்கள்.
இதுவா பக்தி?
அத்தனை சொத்தையும் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு கோவணத்துடன் புறப்பட்ட பட்டினத்தார் சொல்கிறார்...."நான் செய்வது என்ன பக்தி...அந்த மூன்று பேர் செய்த பக்திக்கு முன்னால் நான் செய்வது ஒன்றும் இல்லை...அப்படி எல்லாம் செய்ய முடியாத நான், எங்கே இறைவனை அடைய போகிறேன் " என்று அழுகிறார்.
பாடல்
*வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்; நானினிச் சென்று
ஆளாவது எப்படியோதிருக்காளத்தி அப்பனுக்கே*
பொருள்
"வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்"
சிறுத்தொண்டர் என்று ஒரு நாயனார் இருந்தார். அவர் வீட்டுக்கு சிவனடியார் உருவத்தில் வந்த சிவன், "பிள்ளைக் கறி" போட்டால் சாப்பிடுகிறேன் இல்லையென்றால் சாப்பிடமாட்டேன் என்றார். சிறுத்தொண்டரும் ஒத்துக் கொண்டார்.
சிவனடியார் சில நிபந்தனைகள் வைத்தார்...
- பிள்ளை ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்
- பிள்ளைக்கு ஒரு உடல் குறையும் இருக்கக் கூடாது
- தாய் பிடித்துக் கொள்ள, தகப்பன் பிள்ளையை அரிந்து சமைக்க வேண்டும்
- முக்கியமாக, இருவரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக் கூடாது.
சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் ஒத்துக் கொண்டு பிள்ளைக் கறி செய்து போட்டார்கள்.
என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதே என்கிறார் பட்டினத்தார்.
அடுத்தவர் திருநீலகண்டர் என்று ஒரு நாயன்மாரில் ஒருவர்.
"மாது சொன்ன சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்"
(சூள் = ஆணை, சத்தியம்)
மண் பாண்டம் செய்து விற்கும் குயவனார். சிவனடியார். ஆனால், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் பலவீனம் உள்ளவர். பல பெண்களிடம் உறவு கொள்பவர். காமத்தை கட்டுப் படுத்தத் தெரியாதவர்.
ஒரு நாள் அவரின் இந்த பலவீனம், அவருடைய மனைவிக்குத் தெரிந்தது. அன்று இரவு மனைவியின் அருகில் சென்றார். "எம்மைத் தொடாதீர். தொட்டால் , அந்த திருநீலகண்டத்தின் மீது ஆணை" என்று சொல்லிவிட்டார்.
என்னை என்று சொல்லவில்லை. எம்மை என்று சொன்னார். எம்மை என்பது பன்மை. எனவே எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை என்று இருந்துவிட்டார் திருநீலகண்டர். முடியுமா? காமத்தை அடக்க முடியுமா ?
குடிசை வீடு. அருகில் மனைவி. புரண்டு படுத்தால் கை படும், கால் படும். சிவன் மேல் ஆணை, எம்மை தொடாதீர் என்றதனால் அந்தக் கணம் முதல் எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை என்று இருந்தார்.
"என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதே" என்கிறார் பட்டினத்தடிகள்.
மூன்றாவது ஒரு ஆளைச் சொல்கிறார்.
"நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்"
நாள் + ஆறில்
ஆறே நாள். பக்தி உச்சம் தொட்டது. இறைவன் காட்சி கொடுத்தான்.
கண்ணப்ப நாயனார். சிவ இலிங்கத்தை கண்ட ஆறாவது நாள். இலிங்கத்தின் கண்ணில் இருந்து இரத்தம் வந்ததைக் கண்டு பொறுக்க மாட்டாமல், தன்னுடைய கண்ணை தோண்டி தந்து விட்டார். ஒன்றல்ல, இரண்டு கண்களையும்.
"என்னால் அப்படியும் செய்யும் முடியாதே " என்கிறார் பட்டினத்தார்.
இப்படி எல்லாம் பக்தி செய்து அவர்கள் இறைவனை அடைந்தார்கள். என்னால் அதெல்லாம் செய்ய முடியாது. நான் எப்படி இறைவனை அடைவேன் என்று அயர்ந்து போகிறார் பட்டினத்தார்.
அவர் கதி அப்படி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை ?
வீட்டுக்குள், சௌகரியமாக இருந்து கொண்டு, உடல் நோகாமல் பக்தி செய்து விட்டு, "அடடா என்னைப் போல் பக்திமான் உண்டா" என்று இறுமாத்துப் போகிறோம்.
அப்படியெல்லாம் செய்தவர்கள், இறைவனை அடைந்தார்கள்.
அனைத்தையும் விட்டு விட்ட பட்டினத்தார் போவோமா மாட்டோமா என்று சந்தேகம் கொள்கிறார்.
நாம்?
அடுத்த முறை கோவிலுக்குப் போனதற்கு, உண்டியலில் பணம் போட்டதற்கு, விளக்கு ஏற்றி பாட்டு படிப்பதற்கு ..இதெல்லாம் பெரிய பக்தி என்று நினைக்கும் போது ,இந்தப் பாடலையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment