ஓம் நமசிவாய!
ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!
சைவ நாற்பாதங்கள் : சரியை
சரியை - தாச மார்க்கம்: `எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதும், ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படி’ என்கிறார் திருமூலர். `எல்லாமே கடவுள் என்று உணர்ந்து கருணையோடு வாழ்வதே இறைவனை அடையும் சரியை வழி’ என்கிறார் வள்ளலார்.
திருக்கோயில்களில் செய்யும் தொண்டு, சிவனடியார்களை உபசரித்தல், ஏழைகளுக்கு உதவுதல் எல்லாமே சரியை மார்க்கம்தான். சரியையில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன.
சரியையில் சரியை - திருக்கோயில் தொண்டால் இறைவனை அடைவது.
சரியையில் கிரியை - எல்லோருக்கும் எப்போதும் தொண்டு செய்து வாழ்தல்.
சரியையில் யோகம் - ஈசனை வணங்கி தியானிக்கும்போது உண்டாகும் ஆன்மபலத்தால் பிற உயிர்களை அனுகிரகித்தல்.
சரியையில் ஞானம் - ஆழ்ந்த இறைபக்தியால் உண்டாகும் ஞானநிலையில் இறைவனைத் தரிசித்தல்.
சரியை என்ற வழியில் ஈசனை அடைந்த மகாஞானி திருநாவுக்கரச பெருமான். இவரே சரியை வழி பக்திக்கு மிகச் சரியான உதாரண புருஷர்.
சைவ நாற்பாதங்கள் : கிரியை
கிரியை - சற்புத்திர மார்க்கம்: மிகச் சரியான வழிமுறைகளுடன் பூஜைகள் செய்து இறைவனை அடையும் முறையே கிரியை. குருமார்களின் வழியே தீட்சை பெற்று ஈசனுக்கான சகல பூஜைகளையும் செய்வித்தல், மனதாலும் உடலாலும் எப்போதும் ஈசனை பூஜித்துக்கொண்டே இருத்தலும் இங்கு முக்கியமானது.
கிரியையில் சரியை - பூஜைப் பொருள்களை அளித்தல்.
கிரியையில் கிரியை - நியம, நிஷ்டையுடன் இருவேளை பூஜித்தல்.
கிரியையில் யோகம் - மனதில் எப்போதும் இறைவனைப் பூஜித்தல்.
கிரியையில் ஞானம் - முறையான பூஜைகளால் பெறப்படும் ஞானத்தால் மற்றவர்களுக்கு உபதேசித்தல்.
ஞானசம்பந்த பெருமான் கிரியை வழியில் இறைவனை பூஜித்த மகாஞானி எனப் போற்றப்படுகிறார்.
சைவ நாற்பாதங்கள் : யோகம்
யோகம் - சக மார்க்கம்: ஆழ்ந்த தவத்தால் சிவனோடு கலந்து அவரோடு தோழமைகொண்டு மேற்கொள்ளும் தவ வாழ்வே யோக மார்க்கம். நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், தவம், சமாதி ஆகிய எட்டு நிலைகளில் படிப்படியாகத் தேர்ச்சி பெற்று ஈசனை அடையும் முறையே யோகம்.
யோகத்தில் சரியை - தினசரி வாழ்வுக்கான உடல் மற்றும் மனப் பயிற்சிகள்.
யோகத்தில் கிரியை - இறைவனை வணங்கும் எளிய பூஜைகள்.
யோகத்தில் யோகம் - ஆழ்ந்த தியானம்.
யோகத்தில் ஞானம் - ஈசனோடு கலந்துவிடும் சமாதி நிலை.
தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி பெருமான் ஈசனோடு தவத்தால் கலந்து வாழ்ந்தார். அவரே யோக மார்க்கத்தில் சிறப்பானவராகக் கூறப்படுகிறார்.
சைவ நாற்பாதங்கள் : ஞானம்
ஞானம் - சன்மார்க்கம்: மேற்கூறிய எல்லா வழிகளிலும் ஈசனை வணங்கிய ஒருவர் இறுதியாக, எங்கும் நிறைந்த பரப்பிரம்மமே ஈசன் என்பதைத் தெளியும் நிலையே ஞான மார்க்கம். `ஈசனே குருவாக வந்து உபதேசிக்கும் நிலையிலேயே ஞான மார்க்கம் கூடும்’ என்கிறார்கள் பெரியோர்கள். சிந்தித்தல், கேட்டல், புரிந்துகொள்ளுதல், நிஷ்டையில் கலத்தல் என்ற நான்கு வழிகளில் ஞானம் கூடும். தாயுமான ஸ்வாமிகள் இந்த மார்க்கத்தைக் `கனி' என்றே சிறப்பித்துப் பாடினார்.
ஞானத்தில் சரியை - ஞானத்தை குருவிடம் கேட்டல்.
ஞானத்தில் கிரியை - ஞானமே வடிவான குருவை தரிசித்து அவரின் போதனைகளைச் சிந்தித்தல்.
ஞானத்தில் யோகம் - சதா சிவனைப் பற்றியே சிந்தித்துத் தெளிதல்.
ஞானத்தில் ஞானம் - ஞான நிஷ்டையால் இறைவடிவத்தைக் காணுதல்.
திருப்பெருந்துறையில் குருவைக் கண்டு ஞானமடைந்த மாணிக்கவாசகப்பெருமான் ஞான மார்க்கத்தில் ஈசனை அடைந்த மகாஞானி.
சரியையிலே சதாசிவன் சட வடிவாய் நிற்பான்; கிரியையிலே மந்திரத்தின் மறைபொருளாய் மலர்வான்; ஓங்கி உயர்ந்த யோகத்தில் உள் ஒளியாய் நிற்பான்; ஞானத்தில் தானாகி இரண்டறவே கலப்பான்.
- Yogi Shiva Nesananda
No comments:
Post a Comment